மணிப்பூர் ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம்கோவிந்த் உத்தரவு..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 12:10 pm
Quick Share

புதுடெல்லி: மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.

மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரான இல. கணேசன், தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவராக பாஜகவின் தேசிய துணைத் தலைவராக ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர் இல.கணேசன்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சண்முகநாதன், மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் அருணாச்சல் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், சண்முகநாதனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்ததால், போராட்டங்களையும் நடத்தினர். இதனால் சண்முகநாதன் தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்

பின்னர் 2019ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

இந்நிலையில் தமிழக பாஜகவின் மூத்த தலைவரான இல. கணேசன், மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஆளுநராக நியமிக்கப்படுவது இது 3வது முறையாகும்.

Views: - 315

0

0