பிரதமரின் பேரன்பை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓய மாட்டோம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதி

9 July 2021, 2:44 pm
annamalai bjp - updatenews360
Quick Share

சென்னை : கட்சியின் சித்தாந்தம் மற்றும் பிரதமரின் பேரன்பை ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை நாங்கள்‌ ஓய மாட்டோம்‌ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பிரதமர் மோடியின் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார். இதனை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை, கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌ மற்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது மாண்புமிகு பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை நாங்கள்‌ ஓய மாட்டோம்‌ என உறுதிமொழி எடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- நமது தேசியத்‌ தலைவர்‌ திரு.ஜே.பி.நட்டா அவர்கள்‌ எனக்கு வழங்கி இருக்கும்‌ தமிழக பாஜகவின்‌ தலைவர்‌ எனும்‌ பொறுப்பு என்னை பணிவும்‌, பெருமையும்‌ கொள்ள செய்கிறது. நம்‌ கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின்‌ உயிர்‌ தியாகங்களாலும்‌ மற்றும்‌ பல தன்னலமற்ற தலைவர்களின்‌ தியாகங்களாலும்‌ வழிநடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள நம்முடைய கட்சியின்‌ மூத்த தலைவர்களின்‌ வழிகாட்டுதலுடன்‌, ஒரு அணியாக, நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும்‌ விதமாக உறுதியுடன்‌
நடப்போம்‌.

அழகான மாநிலமான நம்‌ தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களின்‌ தமிழ்‌ பற்றும்‌, நமது தமிழ்‌ பண்பாடு மீது அவர்‌ கொண்டுள்ள பெருமையும்‌ அனைவருக்கும்‌ தெரியும்‌. நம்முடைய கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌ மற்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது மாண்புமிகு பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை நாங்கள்‌ ஓய மாட்டோம்‌. ஜெய்‌ ஹிந்த்‌…வாழ்க பாரதம்‌…வளர்க தமிழ்நாடு, என தெரிவித்துள்ளார்.

Views: - 148

1

0