முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.முருகன் சந்திப்பு : விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்..!

17 August 2020, 7:26 pm
EPS - murugan- updatenews360
Quick Share

சென்னை : விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 22ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்தது.

இது தொடர்பாக கடந்த 13ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா நோய்‌ தொற்று பரவலை தடுக்கவும்‌, பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌, பொது இடங்களில்‌ விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர்‌ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில்‌ கரைப்பதோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ அமலில்‌ உள்ள நிலையில்‌ அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர்‌ சதுர்த்தி பண்டிகையை அவரவர்‌ வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசின் இந்த உத்தரவை ஏற்க மறுத்த இந்து முன்னணி அமைப்பினர், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும் என அறிவித்தது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி பா.ஜ.க. வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் என்றும், எனவே, விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், விநாயகர் சதுர்த்தியை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பா.ஜ.க.வின் கோரிக்கை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அனுமதியளிப்பார் என இந்து மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Views: - 38

0

0