கனடாவில் காலை உணவுத் திட்டம்.. கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 8:38 pm
CM Stalin
Quick Share

கனடாவில் காலை உணவுத் திட்டம்.. கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்குவது குறித்து அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதையும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வேலூர், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை தோற்கடிக்க, தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால், வாக்காளர்களான நீங்கள் அவர்களை தள்ளி வைத்து வெற்றியை கொடுத்தீர்கள். இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘ஒன்றிணைவோம் வா’ என உங்களுக்காக பணியாற்றுவோம். ஆட்சியில் இருந்தால் திட்டங்களை நிறைவேற்றி ‘நீங்கள் நலமா?’ என உங்களிடம் கேட்போம்.

தேர்தல் வந்துவிட்டதால் தமிழ்நாட்டிற்கு பகுதிநேர அரசியல்வாதிகள் சிலர் வருகிறார்கள். அதில் ஒரு பகுதிநேர அரசியல்வாதி தான் பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணையாக அழைத்துக்கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி.

தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் இந்த Part Time அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் அவர்கள் யாரும் தமிழ்நாட்டின் பக்கமே வரமாட்டார்கள்.

வரலாறும், மக்களாகிய நீங்களும் இந்த ஸ்டாலினுக்கு கொடுத்த வாய்ப்பால் 18 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடக்கூடிய காலை உணவுத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இன்று காலை, சமூக வலைதளத்தில் கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக செய்தியை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

குஜராத் முதலமைச்சராக இருந்த மோடிக்கு இப்போது மற்ற மாநில முதலமைச்சர்களைக் கண்டாலே கசக்கிறது. மத்திய அரசு பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறது.

தமிழ்நாட்டை வெறுக்கிற மோடிக்கு பதிலாக, இந்தியா கூட்டணி சார்பில் பிரதமராகப்போகிறவர் நிச்சயம் இந்திய ஜனநாயகத்தின் மீது மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கிற பண்பும் கொண்டிருப்பார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக நிற்பார் என முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

Views: - 114

0

0