‘எங்கு பார்த்தாலும் ஊழல், முறைகேடு… Bribery Janatha Party-யா?’.. ED அதிகாரி கைது… அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 12:04 pm
Quick Share

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பாஜகவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு என்பவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை அமலாக்கத்துறை பிரிவில் பணியாற்றி வந்த அன்கித் திவாரி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஆபிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதேவேளையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அமலாக்கத்துறையையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, இது மனிதர் செய்த தவறு என்றும், அமலாக்கத்துறையின் தவறு அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தன் பங்கிற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்படியிருக்கையில், அண்ணாமலையுடன் கடந்த சில தினங்களாக மோதல் போக்கில் இருந்து வரும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து X தளத்தில் பதிவு போட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது :- ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP – பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா?, எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Views: - 182

0

0