மிரட்டும் மிக்ஜாம் புயல்… என்னவெல்லாம் நடக்கப்போகுதோ என பீதியில் பொதுமக்கள்.. தமிழக அரசுக்கு ராமதாஸ் விடுத்த கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
2 December 2023, 11:02 am
Quick Share

சென்னை மக்களை வெள்ளத்திலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வங்கக்கடலில் உருவாகி சென்னையிலிருந்து 500 கி.மீக்கும் அப்பால் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மிக்ஜாம் என்ற புயலாக மாறி வரும் 5-ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 29-ஆம் நாள் மாலை சில மணி நேரம் மட்டுமே பெய்த மழையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அடுத்து தாக்கவிருக்கும் புயலால் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ? என்ற அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் அச்சங்களும், கவலைகளும் போக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர மக்களுக்கு ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி மிக்ஜாம் புயல் சென்னையை தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என்பது தான். ஏற்கனவே கணிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சென்னையில் மிகக் கடுமையான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான் கவலையளிக்கிறது.

சென்னையில் கடந்த 29-ஆம் நாள் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் பல இடங்களில் வடியவில்லை. அந்த மழையின் போது எந்தெந்த இடங்களில் எல்லாம் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நின்றது என்பதை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதையும் மீறி மழை நீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி, அடுத்த சில மணி நேரங்களில் இயல்பு நிலை திரும்பச் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளைத் தடுக்க போதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மழை – வெள்ளத்தால் சூழப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் வாழும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

29-ஆம் தேதி பெய்த மழையில் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்தது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். மிக்ஜாம் புயல் – மழை காலத்தில் மின்கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 224

0

0