மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கு செல்லாது… நீதிமன்றம் அதிரடி : தமிழக அரசுக்கு ஒரு நல்ல பாடம்… அண்ணாமலை விமர்சனம்
Author: Babu Lakshmanan14 December 2021, 1:36 pm
சென்னை : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தரப்பினர் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால், அதிருப்தியடைந்த இந்திய விமானப்படை, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை விரைந்து முடித்து உண்மைநிலை பற்றி அறிவிக்கப்படும் என்றும், அதுவரையில் தேவையின்றி யூகம் செய்ய வேண்டாம் என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களிலோ, வாட்ஸ் அப்களிலோ வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறையும் தெரிவித்திருந்தது.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தமிழக அரசை அவமதித்ததாக அரசியல் விமர்சகர் மாரிதாஸை போலீசார் கைது செய்தனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா உயிரிழந்த போது கூட கொலையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததே..? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள பகைமையை தூண்டுதல், அமைதியை குலைத்தல், தேசவிரோதம் உள்பட 5 பிரிவுகளின் வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சகோதரர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது! தமிழக பாஜக இந்த தீர்ப்பை வரவேற்பது மட்டுமில்லாமல், தேசியம் பேசக்கூடிய அனைத்து குரலுக்கும் உறுதுணையாக இருக்கும். திமுக அரசு நல்ல பாடத்தை கற்று இருக்கும் என்றும் நம்புகின்றேன்!,” என தெரிவித்துள்ளார்.
அவமதிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டாலும், மோசடி வழக்கு ஒன்றில் மாரிதாஸ் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
0
0