மேகதாது பிரச்சினையில் திமுக தனி ஆவர்த்தனம் : காவிரி உரிமையில் தமிழகத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் வேற்றுமை அரசியல்!!

22 September 2020, 5:36 pm
dmk cauvery - updatenews360
Quick Share

சென்னை: மேகதாது அணைப் பிரச்சினையில் கர்நாடகக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் நிலையில், திமுக எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியைத் தனியாக சந்தித்து மனுக் கொடுத்துள்ளது காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டுவதாகவும், கர்நாடகத்துக்கு சாதமாகவும் அமைந்துள்ளது.

பிரதமரை சந்தித்தபின் பேட்டியளித்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து குற்றம்சாட்டிப் பேசியதும், காவிரிப்பிரச்சினையில் தமிழகம் பிரிந்து கிடக்கிறது என்பதையும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தெளிவுப்படுத்தியது.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகக் கட்சிகள் எப்போதும் ஒற்றுமையாகவே செயல்படுவது வழக்கம். தங்களுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கட்சி அரசியல் மோதல்களும் இருந்தாலும் மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில் கூட்டாகவே செயல்பட்டு வந்துள்ளனர். பிரதமரையும் மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்தித்து காவிரி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தும்போது, அவர்கள் ஒன்றாகவே செல்வார்கள். ஒரே நிலையையே எடுப்பார்கள். நாடாளுமன்றத்திலும் ஒருமித்த குரலில் பேசுவார்கள். ஒருவேளை தனியாக பிரதமரை சந்திக்க நேர்ந்தாலும், எதிர்க்கட்சியின் தலைவர்களைப் பற்றி குறையாகப் பேசுவதில்லை. டெல்லியில் கட்சி அரசியல் செய்வதில்லை.

ஆனால், திமுக எப்போதும் இதற்கு மாறாகவே செயல்பட்டு வந்துள்ளது. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாகக் கடுமையாகப் போராடும் தேவே கவுடாவை 1996-ஆம் ஆண்டு பிரதமராக்க திமுக ஆதரவளித்தது. காவிரி நடுவர் மன்றத்தில் நேர்மையாகவும், தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்தும் செயல்பட்ட நீதிபதி சித்ததோஸ் முகர்ஜியை அப்போதைய பிரதமர் கடுமையான நெருக்கடி கொடுத்து பதவி விலகச் செய்தார்.

திமுக மத்திய அரசில் பதவியில் இருந்தபோதும் அப்பிரச்சினையில் அரசியல் செய்து வந்தது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோதும், அப்போது மத்திய அரசில் பதவி வகித்த திமுக, அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த சட்ட நடவடிக்கைகளினால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேகதாது அணைப் பிரச்சினையில் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தின் கூட்டங்களிலும் தமிழத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக எம்.பி.க்கள் குழு பிரதமரைத் தனியாக சந்தித்துப் பேசிவிட்டு தமிழக முதல்வர் இதுவரை இது குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்று குற்றம்சாட்டியது தமிழ்நாட்டில் இப்பிரச்சினையில் ஒற்றுமை இல்லை என்பதை கர்நாடகத்துக்கும், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும், 2ஜி அலைக்கற்று வழக்கிலும் ஜெகத்ரட்சகன் மீதான ஊழல் வழக்குகளிலும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் திமுக எம்.பி.க்கள் காவிரிப்பிரச்சினை பற்றித்தான் பிரதமரிடம் பேசினார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வெளிப்படையாக எதிர்ப்பு அரசியல் நடத்திக்கொண்டு உள்ளுக்குள் பாஜக அரசுடன் சமரசம் பேசிவருகிறார்களோ என்ற எண்ணமும் வலுத்துள்ளது.

Views: - 13

0

0