மீண்டும் மீண்டும் அவமதிக்கும் கர்நாடகா… நீங்க வண்டிய இங்க திருப்புங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்..!

Author: Babu Lakshmanan
13 October 2021, 2:05 pm
Quick Share

சென்னை : காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு 15 நாட்களாகியும் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டின்‌ நெற்களஞ்சியமாக விளங்கும்‌ காவேரி டெல்டா பகுதியில்‌ வேளாண்‌ தொழிலை மேற்கொள்ள ஏதுவாக, மரபுரிமைப்படி இயல்பாக காவேரி நதி நீர்‌ கிடைக்கின்ற சூழ்நிலை மாறி, நமக்குரிய பங்கினை நாம்‌ வற்புறுத்திக்‌ கேட்டுப்‌ பெறுகின்ற சூழ்நிலைக்கும்‌, நீதிமன்றத்திற்கு சென்று ஆணையைப்‌ பெறுகின்ற சூழ்நிலைக்கும்‌ தமிழ்நாடு தள்ளப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல்‌, அந்த நீதிமன்ற ஆணையை செயல்படுத்த மறுக்கும்‌ நிகழ்வுகளையும்‌ கர்நாடக அரசு அவ்வப்போது உருவாக்கி வருகின்றது.

கால்வாய்‌ பாசனத்தைச்‌ சார்ந்த நிலங்களில்‌ 85 விழுக்காடு நிலங்கள்‌ தமிழ்நாட்டின்‌ உயிர்‌ நாடியாக விளங்கும்‌ காவேரி நீரை நம்பி உள்ளன என்பதையும்‌, காவேரி நீரைப்‌ பயன்படுத்துவதில்‌ தமிழ்நாட்டிற்குள்ள உரிமை மிகப்‌ பழமை வாய்ந்தது என்பதையும்‌ அறிந்த மாண்புமிகு இதயதெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, மிகப்‌ பெரிய சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவேரி நடுவர்‌ மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்து சாதனைப்‌ படைத்தார்கள்‌. பின்னர்‌, காவேரி நடுவர்‌ மன்றத்தின்‌ இறுதி ஆணை உச்ச நீதிமன்றத்தால்‌ சற்று மாற்றியமைக்கப்பட்டது.

இதனைத்‌ தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நதிநீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின்‌ முக்கியமான பணி, காவேரி நதிநீர்‌ ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன்‌ காவேரி நீரின்‌ இருப்பு, பங்கீடு, ஒழுங்குமுறை மற்றும கட்டுப்பாட்டினை கண்காணித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பினை செயல்படுத்துதல்‌ ஆகும்‌.

காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ பதினான்காவது கூட்டம்‌ 27-09-2021 அன்று புது டெல்லியில்‌ நடைபெற்றபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செப்டம்பர்‌ மாதம்‌ 26-ஆம்‌ தேதி வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய 119.5 டி.எம்‌.சி. தண்ணீரில்‌, 85.8 டி.எம்‌.சி. தண்ணீரைத்தான்‌ கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டிருக்கிறது என்று தமிழ்நாடு சார்பில்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக அதனை விடுவிக்குமாறு காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ கர்நாடகாவிற்கு உத்தரவிட்டதோடு, இது குறித்து அக்டோபர்‌ மாதம்‌ 7-ஆம்‌ தேதி நடைபெறும்‌ பதினைந்தாவது காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையக்‌ கூட்டத்தில்‌ விவாதிக்கப்படும்‌ என்றும்‌ கூறியிருந்தது. ஆனால்‌, காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ கூட்டம்‌ திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, காவேரி நதிநீர்‌ ஒழுங்குமுறை குழுவின்‌ கூட்டம்‌ 11-10-2021 அன்று நடைபெற்றது. இந்தக்‌ கூட்டத்தில்‌, செப்டம்பர்‌ மாதம்‌ வரை தரப்பட்டிருக்க வேண்டிய 25.84 டி.எம்‌.சி. தண்ணீரை கர்நாடகா இன்னும்‌ விடுவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ தெரிவிக்கப்பட்டதாகவும்‌, இதனைத்‌ தொடர்ந்து அக்டோபர்‌ மாதம்‌ தரப்பட வேண்டிய 14 டி.எம்‌.சி. தண்ணீரையும்‌ சேர்த்து மொத்தமாக சுமார்‌ 40 டி.எம்‌.சி. தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசு அறிவுறுத்தப்பட்டதாகவும்‌, இந்தக்‌ கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவுகள்‌ காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும்‌ பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்துள்ளன.

காவேரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ உத்தரவிட்டு 15 நாட்களுக்கு மேலாகியும்‌ கர்நாடகா தமிழ்நாட்டிற்குத்‌ தேவையான தண்ணீரை இன்னமும்‌ திறந்துவிடாது மவுனம்‌ காப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின்‌ இந்த உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பினை அவமதிப்பதற்கு சமம்‌. இதன்மூலம்‌ டெல்டா விவசாயிகள்‌ துர்ப்பாக்கியமான சூழ்நிலைக்குத்‌ தள்ளப்பட்டு இருக்கிறார்கள்‌.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக்‌ கொடுத்து, அதன்மூலம்‌ கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரினைப்‌ பெற்றுத்‌ தருமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 556

0

0