பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு : லக்னோ நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
30 September 2020, 11:04 amலக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 1992 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது. பாபர் மசூதி இடிப்பின் பின்னர் ஏற்பட்ட மிகக் கொடிய கலவரங்களால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர்.
வழக்கு கடந்து வந்த பாதை :
டிசம்பர் 6, 1992’இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அயோத்தியில் இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டன. முதல் எஃப்.ஐ.ஆர் பெயர் குறிப்பிடாத கரசேவகர்கள் மீது பதியப்பட்டன.
மசூதி இடிக்கப்பட்டபோது அங்கே இருந்த எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் மீது இரண்டாவது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. மசூதிக்கு பதிலாக ஒரு ராமர் கோவில் கட்டுவதற்கான பிரச்சாரத்திற்கு அத்வானி தலைமை தாங்கினார்.
பின்னர் மேலும் நாற்பத்தைந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க ஜூலை 8, 1993 அன்று ரே பரேலியில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஜூலை 28, 2005 அன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டு 57 சாட்சிகள் தங்கள் அறிக்கைகளை பதிவு செய்தனர்.
28 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், இந்த வழக்கை மே 30, 2017 அன்று உச்ச நீதிமன்றம் லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கில் குற்றவியல் விசாரணையை ஜூலை 19, 2019 அன்று ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை அது நீட்டித்தது. மேலும் இறுதி உத்தரவுக்கு ஒன்பது மாத காலக்கெடுவை நிர்ணயித்தது.
ஒன்பது மாத காலக்கெடு கடந்த ஏப்ரல் 19 அன்று காலாவதியானது மற்றும் சிறப்பு நீதிபதி காலக்கெடுவை நீட்டிக்க மே 6 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதினார். உச்சநீதிமன்றம், மே 8 அன்று, தீர்ப்புக்கு ஆகஸ்ட் 31’ஐ புதிய காலக்கெடுவாக நிர்ணயித்தது.
ஆகஸ்டில், உச்ச நீதிமன்றம் மீண்டும் காலக்கெடுவை செப்டம்பர் 31 வரை நீட்டித்தது.
இதையடுத்து இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் அனைவரையும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கலந்து கொள்ள கோரப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பல முக்கிய தலைவர்கள் தொடர்புடைய இந்த வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அசம்பாவீதம் ஏதும் நிகழாமல் இருக்க நீதிமன்றத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.