தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கில் துரைமுருகனை வளைக்கும் சிபிஐ : திமுக தலைவர்கள் மீது இறுகும் மத்திய அரசின் பிடி!!

Author: Babu
1 October 2020, 7:58 pm
Quick Share

சென்னை: திமுகவின் முக்கிய தலைவர்கள் ஆ.ராசா, கனிமொழி, ஜெகத்ரட்சகன் ஆகியோரைத் தொடர்ந்து, கட்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொதுச்செயலாளர் க.துரைமுருகனை நோக்கி சிபிஐ விசாரணை பாய்ந்துள்ளதால், சட்டமன்றத் தேர்தலுக்கு ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா இறுதிவரை பொதுச்செயலாளராகவே இருந்தார். திமுகவின் தலைமைப்பதவி என்றும் பெரியாருக்கே உரியது என்று அவர் உறுதியாகக் கூறினார். அண்ணா இருந்தபோதே சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் ஒருமுறை அந்தப் பதவியை வகித்தார். நாவலர் இரா.நெடுஞ்செழியனும், அதற்குப் பின் பேராசிரியர் க அன்பழகனும் பொதுச்செயலாளர் பதவியை வகித்தனர். இவர்கள் அனைவரும் தமிழுணர்வு, பகுத்தறிவு போன்ற கொள்கைகளில் உறுதியாக இருந்தவர்கள். போகும் இடமெல்லாம் கொள்கை பேசிவந்தவர்கள், எந்தவிதமான வணிக நிறுவனங்களையோ வேறு தொழில்களையோ நடத்தியவர்கள் இல்லையென்பதால் துணிச்சலுடன் கொள்கைகளைப் பேசிவந்தனர்.

AnnaArivalayam

ஆனால், பொதுச்செயலாளர் பதவியில் தற்போது இருப்பவர் பல வணிக வேலைகளையும், தொழில்களையும் நடத்தி வருபவர். துரைமுருகன் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதிமுக அரசுடன் பேசிஅவரது மருமகள் சங்கீதா நடத்தும் கே.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை ஒப்பந்ததாரர் பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

துரைமுருகன் பல்வேறு தொழில்களிலும், வியாபாரத்திலும் ஈடுபட்டு வரும் தமது மகன் கதிர் ஆனந்தையும் அரசியலில் இறக்கியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தமது மகனுக்கு அவர் சீட் வாங்கித் தந்தார். தேர்தல் நேரத்தில் துரைமுருகன் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. துரைமுருகனின் சொந்த ஊரான காட்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்குப்பம் கீழ்மோட்டூரைச் சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சரக்குக் கிடங்கில் கோடிக்கணக்கான ரூபாய்கள் பதுக்கி புகார்கள் எழுந்தன. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 கோடி ரூபாய் அங்கே கண்டெடுக்கப்பட்டது.

duraimurugan - updatenews360

சீனிவாசன் திமுகவின் விவசாய அணியில் பதவியில் இருக்கிறார். துரைமுருகனுக்கும் மிகவும் நெருக்கமானவர். இதனால், வேலூரில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போது சிபிஐ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து சீனிவாசனின் குடும்பத்தையும் விசாரித்து வருகிறார்கள். கதிர் ஆனந்துக்கும் பதுக்கி வைக்கப்பட்ட பணத்துக்கும் இருக்கும் தொடர்பை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதே வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விரைவில் இறங்கவுள்ளனர்.

ஏற்கனவே, பல தொழில்களையும், வியாபாரங்களையும் செய்து வரும் துரைமுருகன் எந்தக் கட்சியினரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ததால்தான் திமுக பெரும் வெற்றிபெற்றது. இப்போதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாஜகவை விமர்சித்துவரும் நிலையில், மடியில் பெரும் கனத்துடன் இருக்கும் துரைமுருகன் கனத்த மௌனத்தில் இருக்கிறார். பாஜகவை எதிர்த்து அவர் வாய் திறப்பதே இல்லை. இனிமேல், துரைமுருகன் பாஜகவை எதிர்த்து வலுவாகப் பேசமாட்டார் என்று தொண்டர்கள் கருதுகின்றனர்.

Stalin vs BJP - updatenews360

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அக்டோபர் 5 முதல் தினசரி விசாரணை நடக்கப்போவதால் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. பாஜகவுக்கும் எதிராகவும் இந்திக்கு எதிராகவும் கனிமொழி கடுமையான பிரச்சினைகளை எழுப்பிவரும் நிலையில் அவருக்கு இந்த வழக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும், அவரது குடும்பத்துக்கும் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்பினிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது ஏற்கெனவே திமுக முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசாவுக்கு அடுத்தபடியாக மத்திய அரசின் பிடி யார் மீது எப்போது இறுகும் என்ற அச்சம் மற்ற திமுக தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பாஜக எதிர்ப்பையே மையமாக வைத்து திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகி வரும் சூழலில் பாஜகவை எதிர்த்துப் பேசுவதற்கு திமுக தலைவர்கள் அஞ்சும் நிலை உருவாகி வருகிறது.

Views: - 42

0

0