நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ல் தமிழகம் வருகிறது மத்திய குழு!!
28 November 2020, 2:07 pmசென்னை : நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்திய குழு தமிழகம் வருகிறது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. ஆரம்பத்தில் அதி தீவிர புயலாக கரையைக் கடந்த புயல், பிறகு படிப்படியாக தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஆனால், பெரிதாக எந்த பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், சில பகுதிகளில் மழை வெள்ள நீரால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 30ம் தேதி மத்திய குழு தமிழகம் வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்க உள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கும்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த மத்திய குழு திட்டமிட்டுள்ளது.