தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

23 December 2020, 8:57 am
heavy rain - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரத்துக்கு மேலாக மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை அளவை தாண்டிவிட்டது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்யாவிட்டாலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் இன்று காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 1

0

0