துப்பாக்கிச்சூடு நடத்தியது எப்படி..? சம்பவ இடத்தில் வைத்து திமுக எம்எல்ஏவிடம் விசாரணை : வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு..!

22 July 2020, 11:10 am
DMK MLA idhayavarman - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : நில அபகரிப்பு மோதலின் போது நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற வழக்கில், திமுக எம்எல்ஏ இதயவர்மனை சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நடத்திய சோதனையில் அவரது வீட்டில் துப்பாக்கிகளும், குண்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.

இந்த நிலையில், அவரை காவலில் எடுத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இதயவர்மனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக, திருப்போரூர் காவல்நிலைய டிஎஸ்பிக்கள் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எம்எல்ஏ இதயவர்மனின் வீடு, அலுவலகம் மற்றும் குடோன் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.