முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார்தான்… முழுஅதிகாரம் ஓபிஎஸ் – இபிஎஸுக்கே : அதிமுக பொதுக்குழுவில் 16 அதிரடி தீர்மானங்கள்..!!

9 January 2021, 12:59 pm
Quick Share

சென்னை : சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமனதாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகவும், கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் வகுக்கும் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானங்களின் விபரம் விரிவாக :-

இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ தியாகத்தையும்‌, உழைப்பையும்‌ போற்றும்‌ வண்ணம்‌. எழிலுற அமைக்கப்பட்டு வரும்‌ நினைவிடத்தை, உலகப்‌ புகழ்பெற்றதாய்‌ உருவாக்கி, திறந்து வைக்க இருக்கும்‌ தமிழக அரசுக்கு நன்றியும்‌, பாராட்டும்‌!

கழக ஒருங்கிணைப்பாளர்‌ துணை முதலமைச்சர்‌ ஒ. பன்னீர்செல்வம்‌, 2021 தமிழ்நாடு சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ முதலமைச்சர்‌ பதவிக்கான வேட்பாளராக, கழக
ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்களை அறிவித்துள்ளதை, ஏகமனதாக ஏற்கிறோம்‌: வெற்றிவாகை சூட கடுமையாக உழைப்போம்‌!

கொரோனா பெருந்தொற்றில்‌ இருந்து மக்களைக்‌ காப்பாற்ற, அனைவருக்கும்‌ இலவசமாக தடுப்பூசி போடப்படும்‌ என்ற அறிவித்தமைக்கு, மாண்புமிகு தமிழ்‌ நாடு முதலமைச்சருக்கும் இந்திய நடுவண்‌ அரசுக்கும்‌ நன்றி !

இலங்கையில்‌ தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமைகளை வழங்கவும்‌, அதிகார பரவலுக்கு அடித்தளமிட, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில்‌ கூறப்பட்டதுமான, மாகாண கவுன்சில்‌ (மாகாண சபைகள்‌) முறை ரத்து செய்யப்படுவதைத்‌ தடுக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

தமிழ்‌ வழியில்‌ படித்தவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 20 விழுக்காடு முன்னுரிமை வழங்கப்படுவதை முறைப்படுத்தி, புது நெறிகளை வகுத்து, அரசிதழில்‌ வெளியிட்டமைக்கு, அம்மா அவர்களின்‌ தமிழக அரசுக்குப்‌ பாராட்டு !

வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களுடன்‌ மதிப்பீடு செய்யப்பட்டு, டிஜிட்டல்‌ இந்தியா – 2020 தங்க விருதினையும்‌, கோவில்‌ மேலாண்மை திட்டத்திற்கு எடுத்துக்காட்டான மென்பொருள்‌ தயாரித்தமைக்கு வெள்ளி விருதினையும்‌ பெற்றிருக்கும்‌, மாண்புமிகு அம்மா அவர்களின்‌ தமிழக அரசுக்குப்‌ பாராட்டு !

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் மனதை வைத்து, முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து, தமிழகத்தை ஓங்கு புகழ் பெறச் செய்திருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு

ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளித்திட தமிழ்நாடு முழுவதும் 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினி எனும் மருத்துவ மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு

குடிசைப் பகுதிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிமுகம் செய்த தொலைநோக்கு திட்டம்-2023 கொள்கைக்கு உறுதுணையாகவும், பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு உறுதியான வீடுகளை ஏழை, எளியோருக்கு அளிக்கும் வகையிலும், வீட்டு வசதித் திட்டத்தில் பயனடையும் 6 மாநிலங்களில் ஒன்றாக, தமிழகத்தை இணைத்திட்ட பாரதப் பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியும், பாராட்டும்

தமிழக அரசின் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டு

நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்புகளுக்கு உள்ளான தமிழ்நாடு விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் நிவாரணம் அளித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும்

பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசு தொகுப்பும்,ரொக்கமும் வழங்கி வந்ததைப் போல், தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட, பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.2,500 ரொக்கமும் வழங்கும் தமிழக அரசுக்கு பாராட்டு

இந்திய நடுவண் அரசும், பல்வேறு தனியார் அமைப்புகளும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலங்களில் முதலிடம் பெற்ற மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு விருதுகளைப் பெற்றமைக்கு, தமிழக அரசுக்கும், முதலமைச்சர் பழனிசாமிக்கும் பாராட்டுகள்

எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழ்நாட்டு மக்களுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு தமிழக அரசுக்கு பாராட்டு

தமிழக அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கும், மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், பக்குவமோ, பண்பாடோ இன்றி விமர்சித்து வரும் திமுக தலைவருக்கும், அவருடைய கட்சியினருக்கும் கண்டனம்

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வெற்றி வியூகம் வகுக்கவும், கூட்டணி கட்சிகளையும், தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்யவும், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்குதல்

தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி, பேரறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் கனவு கண்டவாறு உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம், உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Views: - 0

0

0