வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை காலை கரையை கடக்கிறது.. உச்சக்கட்ட எச்சரிக்கையில் சென்னை!!

Author: Babu Lakshmanan
18 November 2021, 11:42 am
Chennai rain - updatenews360
Quick Share

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால், சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திரா – வடதமிழம் அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த முறை போல பாதிப்பு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது. தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், கனமழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்க, படகுகள் அனைத்து இடங்களிலும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் உணவு வழங்கவும் தன்னார்வலர்கள், மற்றும் அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 592

0

0