அன்று போராட்டம்… இன்று ஒரே ஓட்டம்… இயக்குனர் பா.ரஞ்சித் பதுங்கியது எங்கே…? வீடுகளை இழந்த மக்கள் கொதிப்பு..!

Author: Babu
31 July 2021, 9:36 pm
Chennai house - updatenews360
Quick Share

நீதிமன்றம் உத்தரவு

சென்னை நகரில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளை ஆக்கிரமித்து 17 ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.
மழைநீர் மற்றும் வெள்ளம் தடையின்றி கடலுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் கோர்ட் கூறியிருந்தது.

Chennai HC -Updatenews360

அதேநேரம் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடாக சென்னை நகருக்கு அப்பால் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்து இருந்தது.

வீடுகள் இடிப்பு

இந்த நிலையில்தான், சென்னை அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 290 குடிசை வீடுகளில் 93 வீடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் இடித்துத் தள்ளினர். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் என்று இந்த வீடுகள் இடிக்கப்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இடிக்கப்பட்ட வீடுகளில் வசித்தவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்த பொருட்களை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் பரிதவித்த்து வருகின்றனர். அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

arugambakkam house - updatenews360

அடுத்த சில நாட்களில் எஞ்சிய வீடுகளையும் சென்னை மாநகராட்சி இடித்து தள்ளிவிடும் என்ற நிலையில் அப்பகுதியில் வசிபோர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்த 290 வீடுகளில் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர், மின்சாரம், பாதாள சாக்கடை இணைப்பு என்று மாநகராட்சி தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. பலர் முறைப்படி மாநகராட்சிக்கு வீட்டு வரியும் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நமக்கு எதிரான அரசு

இது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் வேதனையான விஷயம் என்னவென்றால், கடந்த ஆட்சியின்போது கூவம், அடையாறு பகுதிகளில் கரையை ஆக்கிரமித்துக் கட்டியவர்களின் வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்து தள்ளியபோது, திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று அத்தனை கட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. அப்போதைய அதிமுக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்தன.

TN Secretariat- Updatenews360

குறிப்பாக, சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணிமுத்து நகர் பகுதியில் 370-க்கும் மேற்பட்ட குடிசைவீடுகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கூவம் ஆற்றில் இறங்கியும் போராடினார்கள். அவர்களை இயக்குநர் பா. ரஞ்சித், நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தும் இருந்தார்.

மேலும் அப்போது அவர் தனது ட்விட்டர் பதிவில், “சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறுகணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதலமைச்சர். விழித்துக் கொள்ளுங்கள், சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே! இந்த அரசு நமக்கு எதிரான அரசு” என்று காட்டமாக விமர்சித்தும் இருந்தார்.

pa-ranjith-updatenews360

ஆனால் தற்போது பட்டியல் சமூக மக்களின் ஏகபோக பிரதிநிதி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள்
எங்கே போய் பதுங்கிக் கொண்டனர் என்பது தெரியவில்லை.

அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் வாயே திறக்கவில்லை.

பட்டியல் சமூக மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக உரக்க குரல் கொடுக்கும் விசிக தலைவர் திருமாவளவனோ வீடுகள் இடிக்கப்பட்ட குடும்பத்தினரை
30 மணி நேரத்திற்கு பிறகு சென்று சந்தித்து தனது சுறுசுறுப்பை வெளிக் காட்டியிருக்கிறார்.

கொதித்தெழுந்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

அதில், “கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. மண்ணின் மக்களை‌ ஒட்டுமொத்தமாக பூர்வீக நிலத்தைவிட்டு வற்புறுத்தி வெளியேற்றி, அப்புறப்படுத்தும் இக்கொடுங்கோல்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

Seeman -Updatenews360

குடிசைப்பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி தமிழர்களை மட்டும் எளிதாக விரட்டியடிப்பதும், அவர்களின் பூர்வீக இடத்திலிருந்து வெகுதூரத்தில், நகரத்திற்கு வெளியே துரத்தியடித்து வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதென்பது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும். ஆக்கிரமிப்பென்றால், ஆட்சியாளர்களுக்குக் குடிசைகள் மட்டுமே நினைவுக்கு வருவதேன்? பெரிய வணிக வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவையெல்லாம் சென்னை மாநகருக்குள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறதே, அதன் மீதெல்லாம் இதேபோல முனைப்போடு நடவடிக்கை எடுப்பார்களா? ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா? ஆக்கிரமிப்பு எனக் கூறி, மக்கள் மீது பழியைப் போடும் ஆட்சியாளர் பெருமக்கள் அவர்களுக்கு இருக்க மின் இணைப்பு, எரிகாற்று உருளை இணைப்பு, குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்ற அரசின் ஆவணங்களைக் கொடுத்து அங்கீகரித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? 30 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை ஆக்கிரமிப்பாளரெனப் பழிசுமத்தி விரட்டுவது எந்தவகையிலும் நியாயமில்லை.

ஆகவே, சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மண்ணின் மக்களான ஆதித் தமிழ்க்குடிகளைச் சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான, நிரந்தர வசிப்பிடங்களை உருவாக்கித் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

எங்களுக்கு இழைக்கும் அநீதி

வீடுகளை இழந்து திண்டாடும் மக்கள் கூறும்போது, “அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் இருந்து 20, 25 மீட்டர் தூரத்துக்குள், கரையோரமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், மூன்று நட்சத்திர அந்தஸ்துகொண்ட 2 விடுதிகள், தனியார் மருத்துவமனைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கார் சர்வீஸ் ஷோரூம்கள், கடைகள் என்று ஏராளம் உள்ளன. இதுதவிர 1000க்கும் மேற்பட்ட வீடுகளும் இருக்கின்றன.

இவையெல்லாமே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டவைதான். இப்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூவம் ஆற்றங்கரையையொட்டிய பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
50 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரம் எந்த கட்டுமானமும் கிடையாது. இவற்றை இங்கே கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? அப்படியென்றால் இவற்றையெல்லாம் இடித்து தரை மட்டம் ஆக்கி விடுவார்களா என்ன? அரசுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஒரு நீதி, ஏழைகளுக்கும், பாமர மக்களுக்கும் ஒரு நீதி என்றால் அது எப்படி சரியாகும்?… நாங்கள் மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புக்கு அனுமதி கேட்டபோதே இது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் உங்களுக்கு அனுமதி தர முடியாது என்று எந்த அதிகாரியும் மறுக்கவில்லை. மாறாக, இப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் குடியிருக்கிறீர்கள்
என்று கூறி நாங்கள் 30 வருடங்களாக வசித்த வீடுகளை இடிப்பது அநீதி”என்று என்று கண்ணீர் மல்க வேதனைப்பட்டனர்.

இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித்தை வீடுகள் இடிக்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக பலரும் கண்டித்து வருகிறார்கள்.

“இடிக்கப்பட்ட அத்தனை பேருடைய வீடுகளிலும் டாக்டர் அம்பேத்கரின் படம் இருந்தது. வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டபோது அவையும் இடிபாடுகளில் புதைந்து போயின. இந்த ஒரு காரணத்திற்காகவது பா. ரஞ்சித் தமிழக அரசை கடுமையாக கண்டித்து இருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்ய தவறிவிட்டார்.

பா. ரஞ்சித் இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவில்லை. திருமாவளவனோ சாவகாசமாக வந்து துயரத்தை விசாரிக்கிறார். அப்பாவி பட்டியல் சமூக மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர் காயும் பா.ரஞ்சித் போன்றவர்களின் உண்மையான சுயரூபத்தை அச்சமூக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Views: - 238

0

0