காங்கிரசில் இருந்த போது மனசாட்சி இல்லாமல்தான் பேசினேன் : கமலாலயத்தில் நடிகை குஷ்பு ஒப்புதல்…!

Author: Babu
13 October 2020, 4:25 pm
kushboo bjp -- updatenews360
Quick Share

சென்னை : காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான் என்றும், தற்போது பதவிக்காக நான் பாஜகவுக்கு வரவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசியதாவது :- பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த நாட்டுக்கு நல்லது செய்கிறோம் என்று முன்பு இருந்த கட்சியில் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், அது இல்லை என்பது புரிந்தது. அதனால், நிதானமாக யோசித்து பாஜகவில் இணைந்து உள்ளேன். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால், பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். தாமரை ஒவ்வொரு இடத்திலும் மலர வேண்டும் என்ற ஆசையில் பாஜகவில் இணைந்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை.

பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். அதை தான் நான் விரும்புகிறேன். ஆனால், அவர் எல்லா கருத்துக்களையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். பெரியார் என்றால் அரசியல் பேசக்கூடாது. அவர் அரசியல் வேண்டாம் என்று கூறியவர். ஆனால் திமுக அரசியல் தான் பேசுகிறது.

நேற்று முதல் காங்கிரஸ் கட்சியினர் ரூ.2 தந்து எனக்கு எதிராக ட்வீட் போடச் செய்யும் வேலையை தொடங்கிவிட்டனர். ஓரிடத்தில் இருக்கும் வரை அந்த இடத்துக்கு விசுவாசம் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் 5-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றேன். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் கொள்கை. எதிர்க்கட்சியில் இருந்தால் எதிர்த்து தான் ஆக வேண்டும். பாஜக நிறைவேற்றிய அனைத்து திட்டங்களையும் தொடங்கியது காங்கிரஸ் தான்.

மேலும் நேற்று தான் கட்சியில் இணைந்து உள்ளேன். உடனே தேர்தலில் நிற்க போகிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு முன்பே, பாஜகவில் இருக்கிறவர்களுக்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நான் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை.

அதுமட்டுமின்றி எனது கணவர் கூறியெல்லாம் நான் பாஜகவில் சேரவில்லை. இப்படி பேசுவதெல்லாம் கேவலமான புத்தி. பிற கட்சியில் இருந்து விலகி வேறு யாரும் காங்கிரசில் சேரவில்லையா..? திருநாவுக்கரசரே வேறு கட்சியில் இருந்து வந்தவர் தானே. காங்கிரஸில் இருந்து நான் பேசியதெல்லாம் மனசாட்சி இல்லாமல் பேசியது தான், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, கடந்த காலத்தில் “இலங்கை தமிழர்கள் தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டீர்கள், தற்போது உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- நான் அதே நிலைப்பாட்டில் உள்ளேன். மாற்றங்கள் இருக்கலாம், கொள்கை தான் மாற கூடாது. என்னுடைய கொள்கை மக்களுக்கு நல்லது செய்வது தான். பாஜக மக்களுக்கு நல்லது செய்கின்றனர். அனைத்து விவகாரமும் குறித்தும் பேசுகின்றனர். பாஜக ஆட்சியில் ஒரு மீனவராவது உயிரிழந்துள்ளாரா?. பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியதால் தான் எனக்கு காங்கிரசில் பல பிரச்சனைகள் வந்தன. எனவே நல்லது செய்வதால் தான் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார், எனக் கூறினார்.

மேலும், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பேசினீர்களே, பாஜகவுக்கு எதிராக பேசினீர்களே என்ற கேள்விக்கு, இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக தான் இருப்பேன். நான் இல்லை என்றால், காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை என்று பேசியவர்களுக்கு, தேசிய அளவிலான கூட்டங்கள் வரும் போது தெரியும். அதேபோல், முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளேன், என்றார்.

Views: - 38

0

0