நோய் கட்டுப்பாட்டுப் பகுதி இல்லாத மாவட்டமாக மாறிய சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு..!
24 September 2020, 7:40 pmகொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத பகுதியாக சென்னை மாறிவிட்டதாக மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த போது, பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டன. பின்னர், அந்தப் பகுதிகளை மருத்துவக் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் சென்னையில் நாளொன்று சராசரியாக 2 ஆயிரம் வரை சென்ற பாதிப்புகள் தற்போது 900 என்ற நிலையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் ஏதும் இல்லாத மாவட்டமாக சென்னை உருவாகியுள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது சென்னை மக்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கே புதிய தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது. தினமும் 400 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.