வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

1 September 2020, 5:49 pm
Chennai commissioner prakash - updatenews360
Quick Share

சென்னை : வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வெளி மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனிமைப்படுத்துதலில் சில தளர்வுகளை செய்து சென்னை மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- சென்னையில் இதுவரையில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் தொழில் நிறுவன ஊழியர்களுக்கு பரிசோதனை தொடங்கப்பட இருக்கிறது. மேலும், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி தகரம் அடிக்கும் முறை நிறுத்தப்பட்டு விட்டது.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். தனிமைப்படுத்துதலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களில் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர். அதுவும் அவர்கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். சென்னை கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது பற்றி அரசு முடிவு செய்யும்.

தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 12

0

0