அட சாமி… 77% கூடுதல் மழையா…!! வருணபகவானின் தாராளம்… ஸ்தம்பிக்கும் சென்னை : தவிக்கும் சென்னைவாசிகள்..!!
Author: Babu Lakshmanan11 November 2021, 2:05 pm
சென்னை : மழை, வெள்ளத்தில் மிதந்து வரும் சென்னையில் இயல்பை விட 77% கூடுதலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், மழை எப்போதும் நிற்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இயல்பை விட 77% கூடுதலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “சென்னையில் இயல்பை விட 77 சதவீதம் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தாம்பரம், சோழவரம், எண்ணூரில் அதிக கனமழை பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பை விட 54% மழைப் பொழிந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னையில் கனமழை தொடரும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது, எனக் கூறினார்.
முன்னதாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- நவ.,12ம் தேதி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். நவ.13ல் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும், நவ.,14ல் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். நவ.,15ல் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0