OPSக்கு அடுத்து சசிகலா காலி…ஜெயலலிதா நினைவு நாளில் வந்த பாசிட்டீவான செய்தி ; இபிஎஸ்-க்கு அடித்த மெகா ஜாக்பாட்…!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 1:31 pm
Quick Share

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிமுகவினரை குஷிப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கட்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை தொடர்ந்து, இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் 2017ம் ஆண்டு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். பின்னர், கடந்த மாதம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இதனிடையே, டிசம்பர் 4ம் தேதி வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால், மிக்ஜம் புயல் காரணமாக நேற்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டனர். அதன்படி, அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று கூறி, சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், தள்போது சசிகலாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நீதிமன்ற உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருவதால், அதிமுகவில் அவரது அஸ்திவாரம் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மகிழ்ச்சியான தீர்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 257

1

0