ஃபீஸ் கட்டல என்பதற்காக டி.சி. வழங்க மறுக்கக் கூடாது : தயினியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!
Author: Babu Lakshmanan7 August 2021, 2:00 pm
சென்னை : மாணவர்கள் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக மாற்று சான்றிதழை வழங்க தனியர் பள்ளிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கட்டணத்தை செலுத்தாமல் மாற்றுச் சான்றிதழ் வழங்க தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த விவகாரம் பெரும் பிரச்சனையானது.
இதையடுத்து, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஐக்கிய பள்ளிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், பள்ளிகளில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி, மாற்று சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகளின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் தயாராக இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
0
0