என்னாச்சு ரூ.4000 கோடி…? வெள்ளத்தில் மூழ்கி தவிக்கும் சென்னை… விடியா திமுக அரசை நம்பாதீர்கள்… தொண்டர்களுக்கு இபிஎஸ் போட்ட உத்தரவு
Author: Babu Lakshmanan30 November 2023, 1:31 pm
சென்னையில் ரூ.4000 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக திமுக அரசு கூறி வரும் நிலையில், சாதாரண மழைக்கே சென்னை தாக்குபிடிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் மழைநீர் நுழைந்ததால் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், வடிகால் பணிகளை திமுக அரசு மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், சென்னை ஒருநாள் மழைக்கே தத்தளிப்பது விடியா திமுக அரசின் நிர்வாக திறனற்ற ஆட்சிக்கு சாட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் விடியா திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. நிர்வாகத் திறனற்ற “திமுக மாடல் ரோடு”, “இரண்டரை ஆண்டு கால விடியா திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.
விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க விடியா அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.