இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு முறைகளை வெளியிட்டது சென்னை பல்கலைக்கழகம்..!

15 September 2020, 1:56 pm
Chennai University- updatenews360 -min
Quick Share

சென்னை : ஆன்லைனில் நடக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு முறைகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 21 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் என்றும், தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைனில் நடக்கும் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு முறைகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதாவது, ஆன்லைன் இறுதி செமஸ்டர் தேர்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வு சுமார் 90 நிமிடங்கள் நடக்கிறது. வினாத்தாள் தரவிறக்கத்துக்கான இணைப்பு செல்போனில் அனுப்பப்படும்.

விடை எழுதும் தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவரின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். தேர்வுகளை மாணவர்கள் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். விடைத்தாள்கள் இணையத்தில் பதிவேற்ற முடியவில்லையெனில், மாணவர்கள் விரைவுத் தபால் மூலமாக கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.