தப்பினார் சரத்குமார்…. சிக்கினார் ராதிகா…!! செக் மோசடி வழக்கில் மீண்டும் புதிய உத்தரவு

7 April 2021, 2:13 pm
radhika - sarathkumar - updatenews360
Quick Share

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா மீதான செக் மோசடி வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரூ.2.50 கோடியை ரேடியண்ட் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த ரேடியண்ட் நிறுவனம் சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது 2 வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜரான சரத்குமார், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்கும் விதமாக, தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஆனால்,கொரோனா தொற்று காரணமாக ராதிகா வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் சரத்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Views: - 123

0

0