டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!
16 August 2020, 2:38 pmசென்னை: டாக்டர் திருவேங்கடம் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மருத்துவர் திருவேங்கடம் என்பவர் 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வைத்தியம் செய்து வந்தார். தொடக்கத்தில் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்தார்.
இந்நிலையில், 70 வயதான திருவேங்கடம், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டு, டாக்டர் திருவேங்கடம் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
5 ரூபாயில் சிகிச்சை அளித்த திருவேங்கடம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவை வழங்கியுள்ளார் திருவேங்கடம்.
மருத்துவர் திருவேங்கடத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.