சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.17 ஆயிரமாக அதிகரிக்கப்படும்…! முதலமைச்சர் அறிவிப்பு

15 August 2020, 10:18 am
Quick Share

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் அவர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தமது சுதந்திர தின உரையில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசானது, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெல்லும். கொரோனா தடுப்பு பணிக்கு தமிழக அரசு தரப்பில் ரூ6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக தமிழகத்தில் இருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் 500 ரூபாய் உயர்த்தப்பட்டு 8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக அதிகரிக்கப்படும்.

மெரினாவில் மறைந்த ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

கொரோனாவை வெல்ல 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதியதாக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.  2.01 கோடி பயனாளிகளுக்கு மே மாதம் முதல் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று, பொருளாதார சரிவு ஆகிய நிலைகளில் இருந்து தமிழகம் விரைவில் இயல்பு நிலைக்கு மாறும் என்று பேசினார்.