ஜெ., நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை : இறுதி கட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு
22 January 2021, 1:37 pmசென்னை : மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என அதிமுக முழு பிஸியாக இருந்து வருகிறது.
இதனிடையே, அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா தொடர்பாகவும், சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்னர், ரூ. 79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடக் கட்டுமானத்தின் இறுதிகட்டப் பணிகளை இருவரும் ஆய்வு செய்தனர்.
0
0