சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் : மிருகத்தனமான செயலால் நெஞ்சம் பதறுகிறது : முதல்வர் வேதனை

11 May 2020, 8:19 pm
Eps- updatenews360
Quick Share

சென்னை : விழுப்புரத்தில் எரித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்தை நிவாரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் முன்விரோதம் காரணமாக 10-ம் வகுப்பு சிறுமியை எரித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முருகன், கலியபெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை எரித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

சிறுமி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்களாகிய இருவரையும் கட்சியில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக நீக்கினர்.

இந்த நிலையில், எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்; கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் – சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்,” என கூறியுள்ளார்.