அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டை பெற தீவிரம் காட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!

22 October 2020, 11:12 am
Quick Share

சென்னை : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு, அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க வகையில் செய்யும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையிலும் கடந்த மாதம் 15ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இதனிடையே, கடந்த 16ம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த முடிவும் எடுக்காததால், மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்து வருகிறது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறும். எனவே, இது தொடர்பான விளக்கத்தையும், அழுத்தத்தையும் மூத்த அமைச்சர்களின் மூலம் ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி கொடுத்துள்ளார்.

மேலும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க தேவையான அனைத்து வழிகளையும் அவர் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு, சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், கட்டாயம் ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 15

0

0