புயல், மழை பாதிப்புக்களை சீரமைக்க உடனடியாக ரூ.1,200 கோடி தேவை : பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்

20 January 2021, 8:45 am
EPS_Modi_UpdateNews360
Quick Share

சென்னை : புயல் மற்றும் மழை பாதிப்புகளை சீரமைப்பதற்காக உடனடியாக ரூ.1,200 கோடி வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமரிடம் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அவர் வழங்கினார்.

அதில் கூறியிருப்பதாவது :- கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை கட்டளை கால்வாய் தடுப்பணை வரையில் மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் பரிந்துரை செய்தது. இந்த திட்ட அறிக்கையை இறுதி செய்து, முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பணிகளை மேற்கொள்ள மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும். ரூ.6,941 கோடி மதிப்பிலான காவிரி ஆற்றின் ஒரு பகுதியான கட்டளை கால்வாயில் இருந்து தெற்கு வெள்ளார் வரை நதியை இணைக்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக அரசு ரூ.331 கோடியிலான பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்தப் பணிகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும்.

காவிரி மற்றும் துணை நதிகளை சீரமைக்க தயாரிக்கப்பட்ட ரூ.1,632 கோடியிலான திட்டத்தின், மத்திய அரசின் பங்கான ரூ.713.39 கோடியை விடுவிக்க வேண்டும். இந்த திட்டத்தை ‘நமாமி கங்கை’ (கங்கையை சுத்தப்படுத்தும்) எனும் சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதித்து உரிய நிதியை அனுமதிக்க வேண்டும்.

சென்னையில் ரூ.61, 843 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான மொத்த செலவில் 50 சதவீத தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். சென்னையில் இருந்து சேலத்துக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவை இயக்க, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை அறிவுறுத்தவேண்டும். அதேபோல, கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவர், புரெவி புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான, மீட்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1,200 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 11

0

0