தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடியை ஒதுக்க வேண்டும் : பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்!!

11 August 2020, 1:03 pm
PM - EPS - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சிறப்பு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றுக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டியது. அதேபோல, முன்பை விட பலி எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவையாவது, தமிழகத்தில் பி.சி.ஆர். டெஸ்ட்டுக்கான செலவில் 50 சதவீதத்தை பி.எம். கேர்ஸ்-ல் இருந்து மத்திய அரசு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்வதற்காகவும் ரூ.3,000 கோடியை ஒதுக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்த காரணத்தினால், தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9,000 கோடியை ஒதுக்க வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்திற்கு ரிசர்வ் வங்கியின் சிறப்பு திட்டத்தின் SIDBI ரூ.1,000 கோடியை வழங்க உதவ வேண்டும். நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55,637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை முன் வைத்துள்ளார்.

Views: - 32

0

0