ரூ.535.27 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்… ரூ.156.58 கோடியில் தடுப்பணைகள்… பல திட்டங்களை தொடங்கி வைத்தார் எடப்பாடியார்..!!
4 February 2021, 5:26 pmசென்னை : தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சியின் மூலம் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் ஒருபகுதியாக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சை, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் ரூ.535.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
இதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 20,186 மகளிர் சுய உதவிக்கு குழுக்களுக்கு ரூ.1,083.96 கோடி மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.277.79 கோடி என மொத்தம் ரூ.1,361.75 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் தேனி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.156.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அணைக்கட்டுகள், தடுப்பணைகள், தூண்டில் வளைவுகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோவை மாநகரில் ரூ.265.44 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் – உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் நீட்டிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 931 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 82 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், பேரூராட்சிகள் இயக்குநரகம் சார்பில் 12 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், நகராட்சி நிர்வாக ஆணையாகத்தின் சார்பில் 100 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 9 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
மேலும், 2472 கோடியே 61 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0
0