கடலூரில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு : நிலைகுலைந்த விவசாயிகளிடம் கோரிக்கைகளை பெற்றார்

26 November 2020, 4:19 pm
CM cuddalore inspection - updatenews360
Quick Share

கடலூர் : கடலூரில் நிவர் புயல் மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

தமிழகத்தை மிரட்டி தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிரப் புயலாக நேற்று இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே 11.30 மணி முதல் 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. மேலும் நிவர் புயலால் தமிழகத்தில் சென்னை, கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

நிவர் புயலினால், புதுச்சேரி மற்றும் கடலூரில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்த மாவட்டத்தின் மானம்பாடி கிராமத்தில் மட்டும் 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி வீணாகியுள்ளன.

இந்த நிலையில், கடலூரில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். ரெட்டிசாவடியில் உள்ள குமாரமங்கலத்தில் வெள்ளம் மற்றும் புயலால் நிலைகுலைந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, கடலூர் துறைமுகப் பகுதியில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Views: - 0

0

0