இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

30 October 2020, 5:05 pm
EPS_UpdateNews360
Quick Share

சென்னை : 7.5 % உள்ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஆளுநரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மேலும், ஆளுநரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. சட்டப்பிரிவு 162-ஐ பயன்படுத்தி தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனிடையே, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கு அவரை சந்திக்கும் முதலமைச்சர், உள்ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.

Views: - 24

0

0