விருதுநகர், தருமபுரியில் பெரிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் : அமித்ஷாவிடம் கோரிக்கைகளை வைத்த முதலமைச்சர் பழனிசாமி..!!

21 November 2020, 8:24 pm
eps - amit shah meet -updatenews360
Quick Share

சென்னை : விருதுநகர், தருமபுரியில் பெரிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும், பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லையும் காணொளி காட்சி மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உரை நிகழ்த்தினார். அப்போது, நாடு முழுவதும் குடும்ப ஆட்சிக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்டியதை போல, தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.

நிகழ்ச்சி நிறைவடைந்ததை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தங்கியிருந்த லீலா பேலஸிற்கு திரும்பினார். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு சென்று அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினர். 2021 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், ரூ.10,700 கோடி மதிப்பீட்டிலான நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 50:50 என்ற பங்கீட்டில் செயல்படுத்த வேண்டும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும், விருதுநகர், தருமபுரியில் பெரிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் மையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Views: - 20

0

0