காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!!

26 November 2020, 6:03 pm
Cm cuddalore speech - updatenews360
Quick Share

கடலூர் : நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். ரெட்டிசாவடியில் உள்ள குமாரமங்கலத்தில் வெள்ளம் மற்றும் புயலால் நிலைகுலைந்து போன வாழை மரங்களை நேரில் பார்த்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதுடன், குறைகளையும் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, கடலூர் துறைமுகப் பகுதியில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர், அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நிவாரண முகாம்களில் 13 லட்சம் பேரை தங்க வைக்கும் அளவிற்கு திட்டமிட்டிருந்தோம். நிவர் புயலால் கடலூரில் 35 ஹெக்டேர் பரப்பளவில் வாழைகள் சேதமடைந்துள்ளன.

முழுமையான சேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்த பின்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். கடலூரில் 321 மரங்கள் விழுந்தன. அவை அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. கடலூரில் பாதிக்கப்பட்ட 77 மின்கம்பங்களும் சரி செய்யப்பட்டு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூரில் 52,223 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

உயிர்சேதத்தை தவிர்ப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சாரம் நிறுத்தப்பட்டது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிவுரைகள் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டன.
அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் உயிர்சேதம், பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0