ஜன.,27க்கு பிறகும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் : ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலடி..!!!

20 January 2021, 2:49 pm
CM - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : தமிழகத்தில் ஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் அதிமுக ஆட்சிதான் தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தழுவிய பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத்தில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். அவர் பேசியதாவது :- அதிமுகவை உடைக்க வேண்டும், ஆட்சியை கலைக்க வேண்டும் என எவ்வளவோ முயற்சிகளை செய்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு, அனைத்தையும் முறியடித்து வருகிறோம். ஜன.,27ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருப்பாரா..? என்று கூறி வரும் ஸ்டாலின், இந்த மாதத்தில் ஆட்சி கவிழும், 6 மாதத்தில் ஆட்சி கவிழும் என கூறியவர்தான்.

சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும். ஸ்டாலின் முதலமைச்சர் கனவை கண்டு வருகிறார். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகதான் வெற்றி பெறும். நான் அடிக்கடி விவசாயி, விவசாயி எனக் கூறுவதாக ஸ்டாலின் சொல்கிறார். நான் விவசாயி என்பதால், விவசாயி என்றுதான் சொல்ல முடியும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் அல்ல எடப்பாடி பழனிசாமி என்றும் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்தடைதான் ஏற்படும்.

நாட்டை பற்றியே தெரியாத தலைவர்தான் முக ஸ்டாலின். துறை ரீதியாக பேச ஸ்டாலின் தயாரா..? துண்டு சீட்டு இல்லாமல் பேச வருவாரா..?, என அவர் கேள்வி எழுப்பினார்.

Views: - 0

0

0