வேளாண் மசோதாவை ஆதரிக்கக் காரணம் இதுதான் : முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..!

22 September 2020, 2:38 pm
Quick Share

வேளாண் மசோதாவை ஆதரிப்பதற்கான காரணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கியுள்ளார்.

கொரோனா நிலவரம் மற்றும் அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- அரசின் நடவடிக்கைகளினால் ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. ராமநாதபுரத்தில் முதலமைச்சர் குறைதீர்ப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நான் விவசாயிதான். ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாது. எங்களின் ஆட்சியில் எந்தவிதமான குறையையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட் திட்டங்களை கொண்டுவர முக ஸ்டாலின் முனைப்பு காட்டினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களில் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் உள்ளன. எனவே, அ.தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும், எனக் கூறினார்.