18ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம்… மேகதாது அணை விவகாரத்தில் ‘ஒன்றிய அரசு’ சர்ச்சை எதிரொலிக்குமா..?

16 July 2021, 2:21 pm
Quick Share

சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Stalin Letter - Updatenews360

இது தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இரு மாநில நிர்வாகிகளும் சந்தித்து முறையிட்டு விட்டனர். குறிப்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்பது இரு மாநில மக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், கர்நாடகாவிற்கு சில திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அப்போது, மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதியளிக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, பிற மாநிலங்களைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும், மேகதாது அணை திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படும் எனக் கூறினார்.

megatadu - gajendhira singh - updatenews360

அதேவேளையில், மேகதாது அணை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்காத வகையில், கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.

ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அவர்களுக்கு மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்த உள்ளார்.

அவரது கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்பாரா…? இல்லையா..? என்பது இனி வரும் நாட்களில்தான் தெரிய வரும்.

stalin - pm modi meet - updatenews360

இது தொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் மத்திய அரசுக்கு எதிரான செயல்களிலேயே புதிய அரசு ஈடுபட்டு வந்தது. மேலும், ஒன்றிய அரசு எனக் கூறி மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைபிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தவறவிட்டார். கர்நாடகாவில் பாஜக ஆளும் அரசாக இருந்து வருகிறது. இதனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு சாதகமாக அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

அதேவேளையில், தமிழகத்தில் பாஜக தற்போதுதான் 4 எம்எல்ஏ சீட்டுகளை வென்றுள்ளது. மேலும், தமிழக பாஜகவும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுவாக்க வேண்டும் என்பதால், தமிழகத்திற்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கையில்தான் அனைத்தும் உள்ளது.

கடந்த ஆட்சியாளர்களை போன்று, மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன..? என்பது தமிழக அரசுக்கு தற்போது புரிந்திருக்கும். இனியாவது அதனை புரிந்து நடக்க வேண்டும், என அவர்கள் கூறுகின்றனர்.

Views: - 148

0

0