இன்னொரு இடைத்தேர்தலா…? மகனால் வைகோவுக்கு வந்த மதுரை சோதனை…வைகோவிடம் சீறிய CM ஸ்டாலின்…!

Author: Babu Lakshmanan
29 June 2023, 9:25 pm
Quick Share

மதிமுக எம்எல்ஏ பூமிநாதனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இடையே உருவான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மதிமுகவை சேர்ந்த பூமிநாதன். வைகோ மீது கொலைப்பழி சுமத்தப்பட்டு 1993-ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டது முதலே அவருடன் பயணித்து வருபவர்களில் முக்கியமானவர்.

காலப்போக்கில் வைகோ அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி கூட்டு வைத்ததால் அவருடைய கட்சியின் நிலைமை இன்று தேய்பிறை போல ஆகிவிட்டது வேறு விஷயம்.

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, முதல் முறையாக திமுக சின்னத்திலேயே வேட்பாளர்களை நிறுத்தி தாய்க் கழகத்துடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டது. அந்த தேர்தலில் மதிமுக சார்பில் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்களில் ஒருவர்தான் பூமிநாதன்.

இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ என்கிற முறையில் மேயர் இந்திராணி தலைமையில் நடந்த மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையாக சாடினார். அது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.

பூமிநாதன் பேசுகையில், ‘‘எம்எல்ஏ ஆகி 2 ஆண்டுகளாகி விட்டது. மக்களுக்கு சேவை செய்யவே இந்த பதவிக்கு வந்தேன். மாநகராட்சிக் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறேன். நேரிலும் சந்தித்து அதிகாரிகளிடம் முறையிடுகிறேன். ஆனாலும் தொகுதி மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை கூட செய்து கொடுக்க முடியாமல் திணறுகிறேன். தினமும் பல ஆயிரம் பள்ளி குழந்தைகள் செல்லும் தெப்பக்குளம் சாலையை சீரமைக்குமாறு பலமுறை அதிகாரிகளிடம் கூறிவிட்டேன். இதுவரை சீரமைக்கவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலக்கிறது.

பாதாள சாக்கடைப் பணிக்காகவும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காகவும் தோண்டிய சாலைகளை இதுவரை புதிதாக போட்டுக்கொடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகளையும் குறை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. ஏனென்றால் ஊழியர்களில் ஆரம்பித்து அதிகாரிகள் வரை மாநகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களையும் திருப்திப்படுத்த முடியவில்லை. தொகுதிக்குள்
சென்றாலே மக்கள் என்னை முற்றுகையிடுகின்றனர். காரையும் சூழ்ந்துகொள்கிறார்கள். திமுக மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை.

மக்களுக்கு உதவாத பதவியை பெருமைக்கு வைத்து என்ன பயன். அதனால், நான் என்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம் என முடிவெடுத்து விட்டேன். எனது ராஜினமா கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன். இதை எங்கள் தலைவர் வைகோவிடம் சொல்லிவிட்டேன்” என்று மனவேதனையுடன் கொந்தளித்தார்.

பூமிநாதன் இதை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு மாநகராட்சி அரங்கை விட்டு வெளியே வந்த நிலையில்தான், அவருடைய ராஜினாமா பேச்சு, சொந்த கட்சியான மதிமுகவைத் தாண்டி திமுகவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்தும், தமிழகம் முழுவதும் உள்ள மதிமுக நிர்வாகிகளும் பூமிநாதனிடம் பேசியுள்ளனர்.

இதனிடையே வைகோவுக்கு வேறொரு சிக்கலும் முளைத்தது. ஏற்கனவே 2024 தேர்தலில் தனது மகன் துரை வைகோவுக்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை திமுகவிடம் கெஞ்சி, கூத்தாடி பெறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு இருந்தார்.

அதற்கு ஆப்பு வைப்பது போல பூமிநாதன் எம் எல்ஏவின் பேச்சு அமைந்து விட்டது. இதனால் பதறிப் போன வைகோ உடனடியாக அவரை தொடர்பு கொண்டு, மாநகராட்சி கூட்டத்தில் நான் பேசியது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்தே மாநகராட்சிக் கூட்டத்தில் எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்வேன் என்று கூறிய பூமிநாதன், அடுத்த ஒரு சில மணி நேரத்தில் செய்தியாளர்களை அழைத்து ‘‘நான் ராஜினாமா செய்யபோகிறேன் என்று சொல்லவில்லை. என்னுடைய வருத்தங்களைத்தான் பதிவு செய்தேன். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வேறு மாதிரியாக வந்துவிட்டது.முதலமைச்சர், அமைச்சர்கள், மேயர் அனைவரும் எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறார்கள். கட்சித்தலைவர் வைகோவும், தொகுதி மக்களும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கியுள்ளனர். எனக்கும் யாருக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. எம்எல்ஏ பதவியில் தொடர்ந்து நீடித்து மக்களுக்கு சேவையாற்றுவேன்” என்று ஒரு ‘யூ டேர்ன்’ போட்டார்.

என்ற போதிலும் பூமிநாதன் மாநகராட்சி கூட்டத்தில் திமுக மேயரை குற்றம்சாட்டி பேசியதை அறிவாலயம் அவ்வளவாக ரசிக்கவில்லை. திமுகவினராலும் அதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

மேலும் இப் பிரச்சனை உடனடியாக டிவி செய்தி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் முதலமைச்சர் ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் அங்கு அடுத்த 6 மாதத்துக்குள் ஒரு இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்படும். அது மட்டுமல்லாமல், மதிமுகவை தனது கூட்டணியில் இருந்தே வெளியேற்றும் நெருக்கடியும் ஸ்டாலினுக்கு உருவாகும்.

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்காக, 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துவிட்ட நிலையில் இன்னொரு முறை அதே ரிஸ்க்கை திமுக எடுக்க விரும்பவில்லை என்கிறார்கள்.

பூமிநாதன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை உடனடியாக தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்திற்காக வைகோ வருத்தமும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் மிகுந்த பதற்றத்துடன் உள்ளதாக கூறப்படும் ஸ்டாலின், வைகோவை கடுமையாக வறுத்தெடுத்து விட்டார் என்கிறார்கள்.

அப்போது மதுரை தெற்கு தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தணும்னு நினைக்கிறீங்களா?’ அதை நீங்களும் விரும்புறீங்களா? பூமிநாதனை கண்டித்து வையுங்கள்’ என ஸ்டாலின் அவரை கண்டித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் வைகோவுக்கும், பூமிநாதன் எம்எல்ஏவுக்கும் இடையே இரு வாரங்களுக்கு முன்பாக எழுந்த வேறொரு மோதல்தான் அவர் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்ததற்கு முக்கிய காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வைகோ மீது அதிருப்தியில் இருக்கும் பூமிநாதன், அண்மையில் மதுரைக்கு வந்த அவரிடம் நீங்கள் மகனை வைத்து அரசியல் செய்வது எங்களுக்கு பிடிக்கவில்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?… என்று காட்டமாகவே கேட்டிருக்கிறார்.

அதற்கு வைகோ, ‘உங்கள் உறவினரை நீங்கள் சொன்னபடி மாவட்ட செயலாளராக, நான் நியமித்தேன். அதற்காக இப்படி அபாண்டமாக பேசுவது சரியா? என்று பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே வெடித்த இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆவேசப்பட்ட வைகோ, ‘உங்க எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணுங்க’ என கோபமாக கூறியுள்ளார். அதற்கு பூமிநாதன், ‘யாரை வேண்டுமானாலும் வைத்து கட்சியை நடத்துங்கள், நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று நெற்றியடியாக பதில் அளித்தும் இருக்கிறார்.

இதனால் பூமிநாதனுக்கு, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி தானாகவே உருவாகி விட்டது.

ஏற்கனவே தனது தொகுதியில் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற கோபத்தில் இருந்த பூமிநாதனிடம் வைகோ மீது இருந்த அதிருப்தியும் சேர்ந்துகொள்ள அதுதான் மாநகராட்சி கூட்டத்தில், நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டேன் என்று கொந்தளித்து பேசும் நிலைக்கு அவரை கொண்டு சென்று விட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் அவருடைய சர்ச்சை பேச்சு காரணமாக தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. 2024 தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கணக்குகளும் மாறும் நிலை ஏற்பட்டது. இதை உடனே பூமிநாதன் உணர்ந்தும் கொண்டார்.

தன்னால் ஒரு இக்கட்டான சூழல் திமுகவுக்கும், ஸ்டாலின் ஆட்சிக்கும் உருவாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அறிவித்ததன் பின்னணி என்கிறார்கள்.

ஏற்கனவே ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு குடும்பத்தினருடன் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதே மதுரையில் மதிமுக எம்எல்ஏ வடிவில் வந்த திமுகவுக்கு வந்த இன்னொரு சோதனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்!

Views: - 480

0

0