தீவிரமடையும் மேகதாது அணை விவகாரம் : 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு..!!

9 July 2021, 1:09 pm
stalin mekedatu - updatenews360
Quick Share

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் 12ம் தேதி அனைத்துக் கூட்டம் நடத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மேகதாது அணை கட்டும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கர்நாடகா முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியில் சத்தமில்லாமல் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டியது போன்று, மேகதாது அணை விவகாரத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாத வண்ணம் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது-

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வைக்கும் யோசனைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 165

0

1