தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் ஏன்..? சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

Author: Babu Lakshmanan
7 September 2021, 12:20 pm
Cm stalin - vinayagar chathurthi - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். வீதி வீதியாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் வழிபாடு நடத்திய பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் ஆறு, குளங்களில் கரைக்கப்படும்.

இதனிடையே, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், இதற்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம் எனக் கூறி வருகின்றனர்.

மேலும், பிற மதத்தினரின் ஓட்டுக்களை பெறுவதற்காகவே தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு அமைச்சர்களும் பதிலளித்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது :- கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டே, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று தனிநபர் கொண்டாட்டத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

மண்பாண்ட தொழில் செய்யும் 12,000 தொழிலாளர்களுக்கு மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாததால் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படுகிறது; விநாயகர் சிலை செய்யும் 3,000 தொழிலாளிகளுக்கு கூடுதலாக ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000 வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது, எனக் கூறினார்.

Views: - 395

0

0