தஞ்சையில் ஸ்டாலின் ஆய்வு செய்தாலும் அறிவிப்பு இல்லை : ஏமாற்றத்தில் முடிந்த டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு!!

11 June 2021, 10:06 pm
sugercane - updatenews360
Quick Share

மேட்டூர் அணை திறப்பையொட்டி காவிரி நீர் செல்லும் பாதைகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

கல்லணையில் ஆய்வு :

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்குச் சென்ற அவர், கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் வல்லம், முதலை முத்து வாரி, பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

stalin kallanai- updatenews360

தொடர்ந்து, காவிரி நீர் கடைமடைப் பகுதி வரை தங்கு தடையின்றி செல்வதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

அவருடைய, இந்த தஞ்சை வரவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்தான். தஞ்சாவூரில் தனது ஆய்வின்போது, மிக முக்கியமானதொரு அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுமே எதிர்பார்த்திருந்தனர்.

அதற்கு மிகப்பெரியதொரு காரணமும் உண்டு.

வெற்றிக்கு காரணம் ;

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தமிழக விவசாயிகள் வாழ்வு நலம் பெறும், அவர்களின் பொருளாதார நிலையும் மேம்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியாக திமுக கூறியிருந்தது. இதனால் தேர்தலில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஓட்டுகளை திமுக பெருமளவில் அறுவடை செய்து மிகப்பெரிய வெற்றியும் கண்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தும் கூட அதிமுக இந்த மாவட்டங்களில் அதிக வெற்றி பெற முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

எனவேதான் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தபோது விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி இருந்தது.

புஷ்வானமான எதிர்பார்ப்பு :

அவர் தஞ்சாவூர் செல்வதற்கு முதல்நாள்தான், மத்திய அரசு 2021-2022-ம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 72 ரூபாய் உயர்த்தியிருந்தது. அதாவது ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,868 ரூபாய் என இருந்ததை 1,940 ரூபாயாக உயர்த்தி அறிவித்தது.

இதனால்தான் தொடர்ந்து விவசாயிகளுக்காக குரல் கொடுத்துவரும் ஸ்டாலின்
மத்திய அரசை மிஞ்சும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிடுவார், நிச்சயம், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசின் அறிவிப்பாக வெளியிட்டு விவசாயிகள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைப்பார் என்று உறுதியாக நம்பினர். மேலும் தஞ்சை வரும் ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்களது இந்த முக்கிய கோரிக்கையை ஊடகங்கள் மூலம் நினைவூட்டியும் இருந்தனர்.

CM Stalin - Updatenews360

ஆனால் ஸ்டாலின் தூர்வாரும் பணிகளையும், கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்துவிட்டு உடனடியாக சென்னைக்கு திரும்பிவிட்டார். அங்கு ஊடகங்களுக்கும் அவர் பேட்டி அளிக்கவில்லை. இதனால் டெல்டா விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகினர்.

வெற்றிக்கு காரணமான வாக்குறுதி

இதுகுறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சிலர் கூறுகையில்,”பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பது, விவசாயத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் கடும் விலை உயர்வால் வேளாண் சாகுபடி தொடர்பான அத்தனை அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. தற்போது மத்திய அரசு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை 72 ரூபாய் மட்டுமே உயர்த்தி இருக்கிறது. இது மிக மிகக் குறைவான தொகை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. எனவே முதலமைச்சர் ஸ்டாலின் குவிண்டலுக்கு 2,500 ரூபாய் வழங்கும் அறிவிப்பை, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தபோது, வெளியிடுவார் என்று மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் முடிந்துள்ளது.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள
18 தொகுதிகளில் திமுக, 15 சீட்களைக் கைப்பற்றியுள்ளது. திமுகவின் 2,500 ரூபாய் தேர்தல் வாக்குறுதி காரணமாகத்தான், வழக்கமாக அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய ஓட்டுகள் இம்முறை சட்டப் பேரவை தேர்தலில் விழவில்லை. இல்லையென்றால், 10 தொகுதிகளுக்கும் குறையாமல் அதிமுக இந்த மாவட்டங்களில் வெற்றி கண்டிருக்கும்.

அதனால், எப்படியும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாய் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

இதேபோல் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதையும் உடனடியாக நிறைவேற்றினால் கரும்பு விவசாயிகளும் சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம்!

Views: - 163

0

0

Leave a Reply