கருப்புத்துண்டு அணிந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் : தமிழிசையும் மலர் தூவி வீர வணக்கம்..!!

Author: Babu Lakshmanan
9 December 2021, 12:11 pm
Quick Share

நீலகிரி : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அங்கு மரியாதை செலுத்தப்பட்டு, சாலை மார்க்கமாக கோவை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

முன்னதாக, குன்னூர் வெலிங்டன் உள்ள ராணுவ மையத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் தேசிய கொடி போற்றப்பட்ட நிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, ராணுவ அதிகாரிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி வீரவணக்கம் செய்தார். கருப்புத் துண்டு அணிந்து வந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் விபத்தில் பலியான ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Views: - 182

0

0