நடிகர் சிவாஜியின் 93வது பிறந்த நாள் கொண்டாட்டம் : சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

Author: Babu Lakshmanan
1 October 2021, 11:54 am
sivaji - stalin - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1928ம் ஆண்டு பிறந்த நடிகர் சிவாஜி கணேசன் சிறு வயது முதற்கொண்டே நடிப்பில் பேரார்வம் கொண்டிருந்தார். இதனால், பல நாடகக் குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்னும் நாடகத்தில் பேரரசர் சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இவரது நடிப்பு திறமையைக் கண்டு பெரியாரே வியந்து போனார்.

மேலும், சின்னையப் பிள்ளை கணேசன் என்னும் அவரது இயற்பெயரை மாற்றி சிவாஜி கணேசன் என்றும் அவர் பெயர் சூட்டி கவுரவப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, நடிப்பின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் இன்று அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Views: - 388

0

0