முதலமைச்சர் ஸ்டாலின் மருமகனுக்கு எம்பி பதவி…? டெல்லி அரசியலுக்கு தயாராகிறார்..!!!

20 July 2021, 7:54 pm
dmk 11- updatenews360
Quick Share

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், பொதுவெளி அரசியலில் இதுநாள் வரை தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. திமுக தலைமைக்கு, தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை கடந்த 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அவர் திரைக்கு பின்னால் இருந்தவாறு கூறி வந்திருக்கிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் அனைவரும் அறிந்த ஒன்று.

யார் இந்த சபரீசன்

2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு சபரீசன் பின்னணியிலிருந்து கூறிய ஆலோசனைகள்தான் காரணம் என்றும், அதேபோல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை, திமுக பக்கம் கொண்டு வருவதற்கும் சபரீசன்தான் காரணமாக இருந்தார் என்றும் திமுகவினரே கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக திமுகவின் தொழில்நுட்ப பிரிவு அணியின் முதுகெலும்பாக அவர் திகழ்ந்து வருகிறார் என்றும் சொல்வார்கள்.

பொதுவாக கட்சி தொடர்பான புகைப்படங்கள் எடுப்பது என்றால், அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி விடுவதுதான் சபரீசனின் வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், சபரீசனை நேரில் வாழ்த்தும் திமுகவின் முன்னணி தலைவர்கள் அவருடன் ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். ஆனால் அதை அவர் தவிர்த்து விடுவார். அப்படியே யாராவது வற்புறுத்தினால் ஒரு முக்கிய நிபந்தனையோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்பார்கள். அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களிலும், பொது வெளியிலும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

ஸ்டாலினின் வலதுகரம்.,.?

அதேநேரம், முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற மே 7-ம் தேதி அன்று, முதலமைச்சர் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்திருந்த நிலையில், அவருக்கு பின்னால் நின்றபடி சபரீசன் புன்னகையுடன் ‘போஸ்’ கொடுத்த புகைப்படக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல்வேறு கட்சி தொடர்பான நிகழ்வுகள், சந்திப்புகளில் அவர் வெளிப்படையாகவே கலந்துகொள்ளவும் தொடங்கினார்.

திரைக்குப் பின்னாலிருந்த அவர் தற்போது பொதுவெளியிலும் அதிகம் காணப்படுவதால் வெளிப்படையான அரசியல் நிகழ்வுகளுக்கும் வந்து விட்டதாகவே கருதத் தோன்றுகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 17-ம் தேதி அவருடைய பிறந்த நாள் அமைந்திருந்தது.

அன்று திமுகவின் முக்கிய அமைச்சர்களான ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அன்பில் மகேஷ் 3 பேரும் நேரில் சென்று சபரீசனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அமைச்சர்கள் மட்டுமின்றி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், செய்தியாளர்கள் என ஏராளமான பிரமுகர்கள் சபரீசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் அமைச்சர்கள் மூவருமே, சபரீசனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை தங்களுடைய டுவிட்டர் பதிவுகளில் பெருமிதத்துடன் வெளியிட்டும் இருந்தனர். அவரிடம் உரிய அனுமதி பெற்ற பின்பே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருக்கவேண்டும் என்கிறார்கள்.
இதன் மூலம், சபரீசன் தமிழக அரசியல் களத்திற்கு முன்பக்கமாக வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சபரீசன் பற்றி இன்னொரு தகவல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த இரு தினங்களாக உலா வந்து கொண்டிருக்கிறது.

தற்போது, டெல்லி மேல்-சபையில் தமிழகத்திற்கான 3 எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 3 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் திமுக 2 இடங்களில் வெற்றி பெறும். அதிமுகவில் ஒரு இடத்தில் வெற்றி பெறமுடியும். இந்தப் பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களில் உத்தேச பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சபரீசன்தான் என்கின்றனர்.

இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன

சபரீசனுக்கு எம்பி பதவி?

திமுகவினர் இதுபற்றி கூறும்போது,” கருணாநிதி இருந்தபோதே சபரீசன் திமுகவிற்காக தீவிரமாக செயல்பட்டுள்ளார். 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திமுகவுக்காக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கி இருக்கிறார்.

குறிப்பாக வேட்பாளர்கள் தேர்விலும் அவருடைய பங்களிப்பு இருந்தது. 2011-ல் தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைப்பதில் சபரீசன் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக, அதிமுக கூட்டணி பக்கம் தாவி விட்டது. 2016 தேர்தலில் கருணாநிதி உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் சபரீசன் திமுகவிற்காக மறைமுக தேர்தல் பணியாற்றினர். அப்போது
ஒரு சதவீத வாக்கு விகிதத்தில்தான், திமுக கூட்டணி தோல்வியை தழுவியது.


அதனால்தான் இம்முறை பிரசாந்த் கிஷோரை அவர் அழைத்து வந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக காங்கிரஸ் கூட்டணி அமைவதற்காகவும், தொகுதி பங்கீட்டிற்காகவும் டெல்லி சென்று சோனியா, ராகுல்காந்தி இருவரிடமும் தனிப்பட்ட முறையில் சபரீசன் பேசினார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் நெருக்கடி சூழல் ஏற்பட்டது. அப்போதும் டெல்லிக்கு சென்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து சுமுகமாக பேசி, கூட்டணி தொடர்வதை சபரீசன்தான் உறுதி செய்தார். அதனால் டெல்லி மேல்சபை எம்பி பதவிக்கு திமுக சார்பில் அவர் நிறுத்தப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்குத்தானே
பதவி கொடுக்கப்படுகிறது. இதில் குடும்பத்தை தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது” என்றனர்.

கனிமொழி, தயாநிதிக்கு எதிர்ப்பு

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “எனது குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று 5 வருடங்களுக்கு முன்பு ஸ்டாலின் சொன்னார். ஆனால் அவருடைய மகன் உதயநிதிக்கு 2019-ல் திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு உதயநிதி வெற்றியும் பெற்றுவிட்டார். இப்போது ஸ்டாலின் தனது மருமகனையும் களம் இறக்கப் போகிறார் என்பது தெரிகிறது.

தற்போது டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி என்று மூன்று பேர் மூத்த எம்பிக்களாக உள்ளனர். நீண்டகாலமாக எம்பியாக இருப்பதால் இவர்கள் டெல்லியில் தங்களுக்கென்று ஒரு அரசியல் செல்வாக்கை உருவாக்கிக் கொண்டு விட்டனர் என்பதும் வெளிப்படையானது. இதை ஸ்டாலின் விரும்பவில்லை என்பதே நிஜம்.

Kanimozhi Minister - Updatenews360

மேலும் டெல்லிக்கு பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்கச் செல்லும் போதெல்லாம், இவர்கள் மூவரையும்தான் உடன் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு ஏற்படுகிறது.
அவர்கள் மூலம்தான் பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திப்பதற்கு அனுமதி கேட்கும் நிலையும் உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவே தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் தனக்கு மிக நம்பகமான ஒருவர் எம்பி ஆக இருந்தால் டெல்லியில் நடக்கும் அன்றாட அரசியல் நிகழ்வுகள் தனக்கு உடனுக்குடன் தெரியவரும் என்று ஸ்டாலின் கருதுகிறார்.

இதற்கு முன்னோட்டமாகவே கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சபரீசன் அவ்வப்போது டெல்லி சென்று பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களையும் சந்தித்து வந்தார்.

அவர் எம்பியாக ஆகிவிட்டால் அது டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி மூவருக்கும் திமுக வைக்கக்கூடிய ‘செக்’காகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டனர்.

சபரீசன் டெல்லி மேல்-சபை எம்பி தேர்தலில் நிறுத்தப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 205

0

0