இனி தரமான ஆட்டம்தான்… ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ திட்டம் அறிமுகம் : முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
10 August 2022, 9:29 am
Quick Share

உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக, ஒலிம்பிக் தங்க வேட்டை என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

உலக அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த ஓராண்டில் 1073 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 26 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகமான நிதிக் கொடைகள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம்.

இதன்படி, 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கியப் பங்காற்றுகிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வட சென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் “ஏறுதழுவுதலுக்கு” பிரம்மாண்டமாக தனி விளையாட்டுக் களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அரசு, நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத்தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும், தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞர்கள் விளையாட்டைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க உதவும். நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உட்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம், எனக் கூறினார்.

Views: - 143

0

0