பேனர் கலாச்சாரம் தொடருவது வருத்தமளிக்கிறது : திமுக கொடி நடும் போது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை

Author: Babu Lakshmanan
23 August 2021, 6:51 pm
Cm stalin - updatenews360
Quick Share

திமுக நிகழ்ச்சிக்காக கொடி கட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகே திமுக கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கிய சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். உதவிக்காக பக்கத்து வீட்டில் உள்ளவரின் 13 வயது மகன் தினேஷ் என்ற சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அப்போது கட்சிக் கம்பம் ஊன்றியபோது உயர்மின் கம்பி உரசி சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானான். இது குறித்து சிறுவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் 13 வயது சிறுவனை தொழில் செய்ய அழைத்து சென்ற வெங்கடேசனிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, திமுக நிகழ்ச்சிக்காக கொடி கட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத – கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!, என தெரிவித்துள்ளார்.

Views: - 280

0

0